×

அரூரில் விவசாயியிடம் ரூ.3,500 லஞ்சம் பெற்ற நிலவள வங்கி செயலர் கைது!

 

தருமபுரி மாவட்டம் அரூரில் விவசாயியிடம் ரூ.3,500 லஞ்சம் பெற்ற நிலவள வங்கி செயலாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் பாட்சாபேட்டையில் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (நிலவள வங்கி) செயல்பட்டு வருகிறது. இங்கு கோட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி நாகராஜ்(86) என்பவர் கடந்த 1986ஆம் ஆண்டு டிராக்டர் வாங்குவதற்காக கடன் பெற்றுள்ளார். கடன் தொகையை அவர் முழுமையாக செலுத்திய நிலையில், நில வள வங்கியில் கடன் பெற்றதற்கான என்.ஒ.சி சான்றிதழ் வழங்கக்கோரி வங்கியின் செயலாளரை முருகன்(50) என்பவரை அணுகி உள்ளார்.

அப்போது, ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்ததால்  மட்டுமே என்.ஓ.சி சான்றிதழ் வழங்க முடியும் என முருகன் தெரிவித்துள்ளார். லஞ்சம் தர விரும்பாத நாகராஜன் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.3,500 பணத்தை நாகராஜ், நிலவள வங்கி செயலாளர் முருகனிடம் வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வங்கி செயலாளர் முருகனை கையும் களவுமாக கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.