கரூர் அருகே கதண்டு வண்டு கடித்து மாற்றுத்திறனாளி பலி!
கரூர்
கரூர் அருகே 100 நாள் வேலையின்போது கதண்டு வண்டுகள் கடித்ததில் மாற்றுத் திறனாளி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் அருகேயுள்ள செட்டிபாளையம் பகுதியில் அமராவதி தடுப்பணை அமைந்துள்ளது. இங்கு, செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டுகள், திடீரென பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சூழ்ந்து கொண்டு கடித்தது.
இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் தப்பியோடினர். அப்போது,மாற்றுத் திறனாளியான கார்த்திக் (45) என்பவர் ஓட முடியாத நிலையில், அவரை கதண்டுகள் சூழ்ந்து கொண்டு கடித்தன. இதில் வலி தாங்க முடியாமல் அவர் மயங்கி விழுந்தார்.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.