×

தருமபுரி அருகே கண்ணூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

 

தருமபுரி அருகே கண்ணூர் விரைவு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளான நிலையில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம்  பெங்களூரு அருகேள்ள யஷ்வந்த்பூருக்கு பயணிகள் விரைவு ரயில சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3.50 மணி அளவில் தருமபுரி அருகே வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் சென்றபோது திடீரென கற்கள் பெயர்ந்து ரயில் என்ஜின் சக்கரத்தில்  சிக்கியது. இதனால் ரயில் எஞ்சின் அருகில் உள்ள 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

மலைப்பாதையில் ரயில் மெதுவாக சென்றதால் பெரியளவில் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த 2 ஆயிரத்து 348 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் வாகனங்கள் மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை அடுத்து, தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சேலத்தில் இருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து தடம்புரண்ட பெட்டிகளை  பாதையில் நிலைநிறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ரயில்பெட்டிகள் தடம் புரண்டதால் சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக பயணிகள் தவித்து வருகின்றனர். மேலும் ரயில் விபத்து காரணமாக சேலம் - பெங்களூரு வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.