×

கோவையில் முழு ஊரடங்கு - முக்கிய சாலைகள் வெறிச்சோடின

 

கோவை மாவட்டத்தில் இன்று 2-வது வாரமாக தளர்வுகளற்ற பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில், நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, இரவுநேர ஊரடங்கும், ஞாயிறு அன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று 2-வது வாரமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளதால், பேருந்துகள் , ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்பட வில்லை. மளிகை கடைகள், காய்கறி கடைகள், தியாகி குமரன் மார்க்கெட், சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மற்றும் டீக்கடைகள், பேக்கரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 

ஊரடங்கு காரணமாக திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம், சத்தி சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன், கோவை டவுன்ஹால், பெரிய கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி,  காந்திபுரம், சிங்காநல்லூர், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகள், செல்போன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முழுமையாக  அடைக்கப்பட்டு உள்ளன. 

எனினும், அத்தியாவசிய கடைகளான மருந்து கடைகள், பாலகங்கள் மட்டும் திறந்திருந்தன. கோவை மாநகர பகுதிகளில் 45 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுமார் 700 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கின்போது, அவசியமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.