×

மழையில் நெற்பயிர்கள் அழுகியதால் அதிர்ச்சியில் விவசாயி பலி... தஞ்சை அருகே சோகம்!

 

தஞ்சாவூர் அருகே மழைநீரில் நெற்பயிர்கள் அழுகியதால் அதிர்ச்சியில் விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மேலத்திருப்பந்துருத்தி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாலமுருகன். விவசாயி. இவருக்கு திருமணமாகி மரகதம் என்று மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். பாலமுருகன் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒத்திக்கு எடுத்து, அதில் தாளடி நெல் விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வந்துள்ளது. இதனால் பாலமுருகனின் வயலில் தண்ணீர் தேங்கியதால் நெற் பயிர்கள் அழுகியதாக கூறப்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்த நிலையில், மழையில் பயிர்கள் அழுகியதால் பாலமுருகன் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மாலை வயலுக்கு தண்ணீர் வடிய செய்வதற்காக சென்ற பாலமுருகன், அங்கு வயலில் பயிர்கள் அழுகியிருப்பதை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, பாலமுருகன் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை சிங்காரம் அளித்த புகாரின் பேரில் நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மழையில் பயிர்கள் சேதமடைந்ததால் அதிர்ச்சியில் விவசாயி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.