×

டூவீலர், கார்கள் சிக்கி அவதி: ஈரோடு மரப்பாலத்தின் அவலம்

ஈரோடு மரப்பாலத்தில் உள்ள பள்ளத்தினால் கார்களும், டூவீலர்களும் சிக்கி அவதிக்கு உள்ளாகிறார்கள். ஈரோடு கொலைகார வீதியைச் சேர்ந்தவர் குரு (வயது 35). இவர் இன்று காலை சொந்த வேலை விஷயமாக தனது காரில் மரப்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் நால்ரோடு அருகே பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. அங்கு உள்ள குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சாலை வழியாக ஆறு போன்று வீணாக செல்கிறது. ஈரப்பதம் ஏற்பட்டு சாலையின் மத்தியில் சிறு சிறு
 

ஈரோடு மரப்பாலத்தில் உள்ள பள்ளத்தினால் கார்களும், டூவீலர்களும் சிக்கி அவதிக்கு உள்ளாகிறார்கள்.

ஈரோடு கொலைகார வீதியைச் சேர்ந்தவர் குரு (வயது 35). இவர் இன்று காலை சொந்த வேலை விஷயமாக தனது காரில் மரப்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் நால்ரோடு அருகே பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. அங்கு உள்ள குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் சாலை வழியாக ஆறு போன்று வீணாக செல்கிறது. ஈரப்பதம் ஏற்பட்டு சாலையின் மத்தியில் சிறு சிறு பள்ளங்கள் ஏற்பட்டு இருந்தன.

இந்நிலையில் குரு சென்ற கார் சாலையில் உள்ள ஒரு பள்ளத்தில் சிக்கியது. குருவால் மேற்கொண்டு வண்டியை நகர்த்த முடியவில்லை. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சேர்ந்து காரை தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு கார் வெளியே எடுக்கப்பட்டது.

இதேபோல் அந்த பகுதியில் வந்த ஒரு ஷேர் ஆட்டோவும் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோ சிறிது நேரத்தில் வெளியே எடுக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் இரு சக்கரங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆகவே, மரப்பாலம் சாலையை உடனடியாக சரி செய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.