×

டாப்ஸ்லிப் முகாமில் யானை பொங்கல் கொண்டாட்டம்... சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு!

 

பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்ஸ்லிப் வளர்ப்பு யானைகள் முகாமில் நடைபெற்ற யானை பொங்கல் விழாவை, சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில்  கும்கி கலீம், சின்னதம்பி, அரிசி ராஜா உள்பட 27 காட்டு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் இங்கு ஆண்டுதோறும் யானை பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது.

தற்போது தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அறிவித்த நிலையில், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிந்து டாப்ஸ்லிப்புக்கு முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று யானை வளர்ப்பு முகாமுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று பொங்கல் நிகழ்ச்சிக்கு வளர்ப்பு யானைகளுக்கு அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து பழம், கரும்பு, சத்து மாவு உணவாக அளிக்கப்பட்டது. 

இதில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குநர் கணேசன், வனச்சரகர்கள் மணிகண்டன், காசிலிங்கம், வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு யானை பொங்கலை கண்டு களித்தனர்.