×

சேதமடைந்த தளவானூர் தடுப்பணை மதகுகள் வெடிவைத்து தகர்ப்பு!

 

விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் தடுப்பணையில் வெள்ளத்தால் சேதமடைந்த மதகுகள் நேற்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

விழுப்புரம் அருகிலுள்ள தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எனதிரிமங்கலத்திற்கு இடையே தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 37 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணை கடந்த 2020ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.  திறக்கப்பட்ட ஒன்றரை மாதத்தில் அணையின் தண்ணிர் திறப்பு பகுதியில் உடைப்பு ஏற்பட்டதால், 7 கோடியில் அணை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டதால் தளவானூர் பகுதியில் உள்ள தடுப்பணையின் கரை பகுதி மற்றும் மதகுகள் உடைந்து, தண்ணீர் முழுவதுமாக வெளியேறியது.  இதையடுத்து, பொதுப்பணி துறை அதிகாரிகள், கரை பகுதியில் உள்ள மதகுகறை ஜெலட்டின் குச்சிகளை வைத்த தகர்க்கும் முயற்சி செய்தனர். 

நேற்று முன்தினம் இரவு 100 ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி அணையை வெடிக்கச் செய்த நிலையில், சேதமடைந்த பகுதி வெடித்து சிதற வில்லை. இதனை அடுத்து, நேற்றும் வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.  அப்போது, தடுப்பணை முற்றிலுமாக வெடிவைத்து தகர்க்கப்பட்டது.