×

ஊரடங்கு எதிரொலி -  ஈரோட்டில் இரவு நேர சினிமா காட்சிகள் ரத்து!

 

கொரோனா பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஈரோட்டில் இரவு நேர சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக, திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, சினிமா தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளராக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தியேட்டர்களில் இரவுநேரக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 45  தியேட்டர்கள் உள்ளன. இதில், மாநகர் பகுதிகளில் மட்டும் 12 தியேட்டர்கள் உள்ளன.  தினசரி காலை 11 மணி, 2.30 மணி, மாலை 6.30 மணி மற்றும் இரவு 10 மணி என 4 காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. பண்டிகை காலங்களில் புதுப் படங்கள் வெளி வருவதையொட்டி அதிகாலை ரசிகர்கள் கண்டு தனி காட்சி என ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இரவுநேர காட்சி ரத்து செய்யப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதைப்போல், ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அன்று முழுவதும் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக, ஈரோடு தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துக் கொண்டனர்.