×

கொரோனா விதிமீறல்- கோவை மாவட்டத்தில் 3 நாளில் ரூ.2.89 லட்சம் அபராதம் வசூல்!

 

கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக கடந்த 3 நாட்களில் ரூ.2.89 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட எஸ்.பி., செல்வநாகரெத்தினம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கோவை மாவட்டத்தில் 41 இடங்களில்  தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. சாலையில் தேவையின்றி சுற்றித்திரிபவர்கள், கொரோனா தடுப்பு விதிமீறலில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 10 நான்கு சக்கர வாகனங்களும், 61 இருசக்கர வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. கோவை மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டு உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், 48 மணிநேரத்துக்கு முன்பாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவை மாவட்டத்தில் சுமார் 500 காவலர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முகக் கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டுதலை மீறியவர்கள் என கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் 3 நாட்களில் மட்டும் 1,284 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.