×

கொரோனா பரவல் எதிரொலி... ஈரோட்டில் இன்று முதல்  இரவுநேர ஊரடங்கு அமல்!

 

கொரோனா பரவல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து தமிழக அரசு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதன்படி, இரவு 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் இரவுநேர ஊரடங்கு கட்டுப்பாட்டின்போது சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இரவு நேர பஸ் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும், பஸ் பயணத்தின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், ஆஸ்பத்திரிகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள் , மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம் மையங்கள் சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு நேரடி விகுப்புக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ரயில் மற்றும் பஸ் நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இரவுநேர ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே சுற்றக் கூடாது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இரவு நேர ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இரவுநேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்