×

கோவையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

 

கோவை மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து, சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் டோஸ் செலுத்த அரசு பரிந்துரைத்து உள்ளது.அதன்படி, கோவை மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று தொடங்கியது. இதனையொட்டி, கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 3-வது தவணை தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் 85,554 பேர், முன்கள பணியாளர்கள் 96,762 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 72,000 என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட இணைக்கப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள மொத்த கொரோனா கேர் சென்டர்களில் 4300 படுக்கைகளும், 5000 ஆக்சிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளதால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்தார். அதே சமயம், மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும்  தகுதியுள்ள நபர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.