×

"மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறல்"... கோவை அரசுக்கல்லூரி பேராசிரியர் மீது ஆட்சியரிடம் புகார்!

 

கோவை அரசு கலை கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்ளும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

கோவை அரசுக் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் ரகுநாதன். இவர் மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் சாட் செய்வதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் கடந்த சனிக்கிழமை கல்லூரி முதல்வரை சந்தித்து பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளனர்.மேலும், மாணவிகளிடம் அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படும் ஸ்கீரின் ஷாட்டுகளையும் வழங்கி உள்ளனர்.

ஆனால், கல்லூரி முதல்வர் புகார் மீது எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அப்போது, பேராசியர் ரகுநாதன் மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆதாரத்துடன் புகார் அளித்தும் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.

மேலும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ்அப்பில் பேசிய ஸ்கிரீன் ஷாட்களை மாவட்ட ஆட்சியரிடமும் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஆட்சியர் மற்றும் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.