×

உழவர் சந்தையில் வியாபாரம்; 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்!

 

ஈரோடு மாவட்டத்தில் உழவர் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபடும் விவசாயிகள், கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதியில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்கு தனியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மற்ற இடங்களை விட இங்கு காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், தற்போது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

சமூக இடைவெளியை  கடைபிடிக்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  அதேபோல், விவசாயிகள் அனைவரும் தங்கள் செலுத்திக்கொண்ட 2 தவணை தடுப்பூசிக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், இதுவரை தடுப்பூசி போடாத விவசாயிகள் கண்டிப்பாக தடுப்பூசி சேர்த்துக்கொள்ள வேண்டும்மென அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்