×

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி!

 

பொதுவழிப்பாதையை ஆக்கிரமித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உளிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியாயி. இவரது மகன் குமார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 4 பேரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தனர். அப்போது, மாரியாயி திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீதும், மகன் மற்றும் பேரக்குழந்தைகளின் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து செயல்பட்டு 4 பேரையும் தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.தொடர்ந்து, அவர்களை மாநகர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.  

அப்போது, மாரியாயி, உளிபுரம் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரிடம் கடந்த 2005ஆம் ஆண்டு சுமார் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை ரூ.1.65 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். தொடர்ந்து, மாரியாயி செல்லக்கூடிய பொதுவழித் தடத்தை தங்கவேல் அடைத்துள்ளார். பாதை ஆக்கிரமிப்பு குறித்து மாரியாயி கேட்டபோது, அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து மாரியாயி,  கெங்கவல்லி காவல் நிலையம், வட்டாட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், புகார் மீது எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

  பணம் கொடுத்து வாங்கிய நிலத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விரக்தியடைந்த மாரியாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும், பொது வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொலை மிரட்டல் விடுத்து வரும் தங்கவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.