×

கோவை அருகே வனத்துறை வாகனம் மீது செங்கல் கடத்திய லாரி மோதி விபத்து - போலீசார் விசாரணை

 

கோவை தாடகம் பகுதியில் செங்கல்சூளையில் இருந்து சட்டவிரோதமாக செங்கற்களை கடத்த முயன்ற லாரி, வனத்துறை வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் வனத்துறையினர் அதிர்ஷ்ட வசமாக  உயிர் தப்பினர். 

கோவை மாவட்டம் தடாகம், சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் தடை செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான ஆழத்தில் செம்மண் தோண்டப்பட்டது. மேலும், இப்பகுதிகள் ஹெச்ஏசிஏ கமிட்டியின் கீழ் வருவதால் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. அளவுக்கு மீறிய கட்டுமானங்கள் செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு உள்ளது.

இந்த உத்தரவை செங்கல் சூளைகள் முறையாக பின்பற்றாமலும், அளவுக்கு அதிகமான காற்று மாசினை ஏற்படுத்தியதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றம் இப்பகுதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை அடுத்து, செங்கல்சூளைகள் மூடப்பட்டன. ஆனாலும், சூளைகளில் இருக்கும் செங்கற்களை இரவு நேரங்களில் சூளை உரிமையாளர்களால் கடத்தப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் கணுவாய் பிரிவு அருகே வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக செங்கற்களை கடத்திவந்த லாரி வனத்துறையினர் வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில், வனத்துறையினரின் வாகனம் சேதமடைந்தது.

இதனை தொடர்ந்து, வனத்துறையினர் அந்த லாரியை துரத்திச்சென்று பிடித்து, தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் பேரில் டிஎம்டி செங்கல்சூளை உரிமையாளர் அருண், லாரி ஒட்டுநர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.