×

கந்துவட்டி கொடுமையால் சிமென்ட் ஆலை ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 

அரியலூரில் கந்துவட்டி கொடுமையால் சிமென்ட் ஆலை ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் ரயில் நிலையம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த நபர் உளுந்தூபேட்டையை சேர்ந்த நரசிம்மலு (45) என்பதும், இவர் அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து, அவரது செல்போனை ரயில்வே போலீசார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் தனது செல்போனில் பேசிய வீடியோ ஒன்றை நண்பர்களுக்கு  வாட்ஸ் அப்பில் பகிர்ந்தது தெரிய வந்தது. அந்த வீடியோ பதிவில், தான் வட்டிக்கு பணம் வாங்கியதால், கந்து வட்டி போட்டு அதிகப்படியான பணத்தை இருவர் பெற்றுக் கொண்டதாகவும், மேலும் பணத்தை கேட்டு தொல்லை கொடுப்பதால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, ரயில்வே போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.