×

ஆலங்குடி அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை நம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(41). கூலி தொழிலாளி. இவரது மனைவி கௌதமி. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதனிடையே கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் கௌதமி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், சுந்தரமூர்த்தி தனியே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள மிளகாய் அரவை மில்லில், சுதந்தர மூர்த்தி படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை மில் ஊழியர்கள் சென்று பார்த்தபோது, சுந்தரமூர்த்தி தலையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இதுகுறித்து ஆலங்குடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சுந்தர மூர்த்தி முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.