சூலூர் அருகே பெட்ரோல் பங்க் வளாகத்தில் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி!
கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி - செட்டிப்பாளையம் சாலையில் அதிமுக பிரமுகர் சக்திவேலுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. பங்க் வளாகத்தில் 2 சிறிய அளவிலான அறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் அந்த அறைகள் கட்ட அஸ்திவாரம் போடவில்லை என கூறப்படுகிறது. இதில் ஒரு அறை ஏடிஎம் மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மற்றொரு அறையில் ஜன்னல் வைப்பதற்காக அறையின் ஒரு பகுதியில் சுவர் இடிக்கப்பட்டது. இந்த பணியில் வேளாண்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளி சிவா, கோபால்சாமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து சிவா, கோபால்சாமி ஆகியோர் மீது விழுந்தது. பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கோபால்சாமி பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.