×

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!

 

மன்னார்குடி அருகே சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பரவாக்கோட்டை தோப்பு தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 3 மகன்ளும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், பரவாக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள 5ஆம் எண் கால்வாய் பகுதியில் சென்ற மின்சார கம்பி அறுந்து சாலையில் கிடந்துள்ளது. நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக அந்த வழியாக நடந்து சென்ற சுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக மின்கம்பியை மிதித்துள்ளார்.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த பரவாக்கோட்டை போலீசார், சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியின் மனைவி சரோஜா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.