எடப்பாடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கட்டிட பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கல்வடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மோனிஷா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தினேஷ்குமார் எடப்பாடி அருகே உள்ள நெடுங்குளம் பகுதியில் புதிதாக கட்டுபட்டு வரும் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமாரை சக தொழிலாளர்கள் மீட்டு எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பூலாம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.