கோவை அருகே அட்டைபெட்டி நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி!
கோவை மாவட்டம் சூலூர் அருகே தனியார் அட்டைபெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் இயந்திரத்திற்குள் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி(32). இவர் சூலூரை அடுத்துள்ள குளத்தூரில் உள்ள அட்டை பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகேஷ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை பணிக்கு வேலை சென்றிருந்த ரகுபதி அட்டைப்பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது, அட்டைகளை இயந்திரத்தில் அடுக்கிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த இயந்திரம் செயல்பட துவங்கி உள்ளது.
அப்போது, ரகுபதியின் தலை இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் அலறி துடிக்கவே, சக ஊழியர்கள் இயந்திரத்தை நிறுத்த முயன்றுள்ளனர். அதற்குள்ளாக ரகுபதியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அஜாக்கிரதையாக செயல்பட்ட அட்டைப்பெட்டி நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.