×

ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி குறித்த புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!

 

ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலூரில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஆயுதப்படை காவலர் தற்கொலை கொண்டதை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் போலீசார், கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாரிடம் தகவல் அளிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறிக்கடை நடத்தி வரும் மொகமத் ஷெரிப் என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைதுசெய்து உள்ளனர்.

எனவே கந்துவட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால், ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நேரடியாகவே அல்லது எஸ்.பி. வாட்ஸ் ஆப் எண் 96552 20100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், காவல் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன், தகவல் அளிப்பவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்தனர்.