×

பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு நீர்திறப்பு நிறுத்தம்!

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. 105 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின், நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 2.47 லட்சம் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு இல்லாததால், அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. அத்துடன், வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80.77 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 150 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை வரை தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று முதல் நிறுத்தப்பட்டது. மேலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 155 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .