×

அந்தியூர் அருகே லஞ்ச புகாரில் கைதான கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்!

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான கிராம நிர்வாக அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பட்டா மாற்றம் செய்வதற்காக, எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவல சதீஷ்குமாரை (35) அணுகி உள்ளார். அப்போது, அவர் பட்டா மாறுதலுக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை செல்வராஜ், எண்ண மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று சதீஷ்குமாரிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதீஷ்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

மேலும், லஞ்சம் பெற இடைத் தரகராக செயல்பட்ட பாலசுப்பிரமணியம் என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள விஏஓ சதீஷ்குமாரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், லஞ்ச புகாரில் கைதான சதீஷ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கோபிச்செட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.