×

கோவையில் வேன் ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - இளைஞர் கைது!

 

கோவையில் வேன் ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வீரியம்பாளையம் காந்தி வீதியை சேர்ந்தவர் ரவி (47). இவர் சரக்கு வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் ரவி, காளப்பட்டி சாலை நேரு நகர் பள்ளிக்கூட சந்திப்பில் சரக்கு வேனில் அமர்ந்து, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (49) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென தான் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை ரவி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் ரவி அலறி துடித்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர் மீது எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் ரவி பலத்த தீக்காயம் அடைந்தார். மேலும், அவருடன் இருந்த மணிகண்டனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவி மீது பெட்ரோலை ஊற்றிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் விருதுநகர் மாவட்டம் எஸ்.ராமச்சந்திராபுரம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த வெயிலுமுத்து மகன் பூமாலை ராஜா (23) என்பது தெரிய வந்தது. பிஎஸ்சி பட்டதாரியான பூமாலைராஜா வேலைதேடி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கோவை வந்துள்ளார். ஆனால் தனது படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காததால் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். மேலும், தனக்கு வேலை கிடைக்கவில்லையே என மனவேதனையில் இருந்துள்ளார். 

இந்த நிலையில், சம்பவத்தன்று பூமாலைராஜா தனது இருசக்கர வாகனத்திற்கு போடுவதற்காக அங்குள்ள பங்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்துள்ளார். அப்போது, ரவியும், மணிகண்டனும் பேசி கொண்டிருப்பதை பார்த்த அவர், திடீரென ரவியின் மீது தான் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றிவிட்டு தீ வைத்ததுள்ளார். இதில் ரவி உயிரிழந்தார். மேலும், ரவியை தனக்கு யார் என்றே தெரியாது என்றும், வேலை கிடைக்காத விரக்தியிலேயே அவர் மீது தீ வைத்ததாகவும் பூமாலை ராஜா கூறினார். இதனை அடுத்து, போலீசார் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர். வேலை கிடைக்காத விரக்தியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த வேன் ஓட்டுநரை, இளைஞர் எரித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது.