×

தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது... 270 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!

 

தருமபுரி மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 270 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்தனர்.

தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அதியமான்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடத்துாரன் கொட்டாய் பகுதியில் தருமபுரி கலால் பிரிவு காவல் ஆய்வாளர் பாரதி மோகன், உதவி ஆய்வாளர் விஜய் சங்கர் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா (49) என்பதும், அவர் தனது தேக்கு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரது தோப்பில் இருந்த 120 லிட்டர் சாராய ஊரலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், இது தொடர்பாக ராஜாவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். 

இதேபோல்,  கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கணபதி (37) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 25 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 150 லிட்டர் சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர்.