×

தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வான திருநங்கை!

 

தமிழ்நாட்டில் முதன்முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வுபெற்ற எட்டயபுரத்தை சேர்ந்த திருநங்கை ஸ்ருதிக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு, இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கடந்த மாதம் 4ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த திருநங்கை ஸ்ருதி என்பவர் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கிராம உதவியாளர் பணிக்கு தேர்வான திருநங்கை என்ற சிறப்பை ஸ்ருதி பெற்றார்.

இந்த நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருநங்கை ஸ்ருதிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலகரந்தை கிராமத்தில் கிராம உதவியாளர் பணிக்கான, பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம்ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது ) அமுதா மற்றும் வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.