×

நீலகிரி கெத்தை மலைப்பாதையில் அரசுப்பேருந்தை வழிமறித்து நின்ற காட்டுயானைகள்!

 

நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் அரசுப்பேருந்தை காட்டுயானைக் கூட்டம் வழிமறித்து நின்றதால் பயணிகள் அச்சமடைந்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை மலைப்பாதை வழியாக கோவை மாவட்டத்திற்கு செல்லும் 3-வது மாற்றுப்பாதையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று மாலை மஞ்சூரில் இருந்து அரசுப் பேருந்து ஓன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கெத்தை மலைப்பாதை வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, கெத்தை மலைப்பாதையில் ஒற்றை குட்டியுடன் உலா வந்த 5 காட்டுயானைகள் திடீரென சாலையின் குறுக்கே வழி மறித்து நின்றன.

இதனை கண்டு அச்சமடைந்த பேருந்து ஓட்டுனர், உடனடியாக பேருந்தை நிறுத்தினார். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த யானைக்கூட்டம் சாலையில் மெதுவாக நடந்து சென்றது. அவற்றை பேருந்து ஓட்டுநரும் பின் தொடர்ந்து மெதுவாக இயக்கிச்சென்ற நிலையில், சிறிது நேரத்திற்கு பின்னர் யானைக்கூட்டம் வனப் பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கிச் சென்றார்.

யானைக்கூட்டம் அரசுப்பேருந்தை வழிமறித்து நிற்பதை பேருந்தில் இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே வனவிலங்குகள் உணவு தேடி மலைப்பாதையில் உலா வரும் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கிச் செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.