×

கூடலூர் அருகே தனியாக இருந்த குட்டி யானையை மீட்டு, தாய் யானையுடன் சேர்த்த வனத்துறையினர்!

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியாக இருந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதனை  தாய் யானையுடன் கொண்டு் போய் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நீலகிரி மாவட்டம் பந்தலுார் சரகத்திற்கு உட்பட்ட கிளன் ராக் வனப்பகுதியை ஓட்டி வாழ்ந்து வரும் பழங்குடியினர், அப்பகுதியில் குட்டி யானை ஒன்று நடக்க முடியாமல் படுத்திருப்பதை கண்டு, வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பிறந்து 3 மாதங்களே ஆன ஆண் குடிட்டி யானை மீட்டனர். தொடர்ந்து, வனப்பகுதி முழுவதும் குழுக்கள் அமைத்து அந்த குட்டி யானையின் தாயை தீவிரமாக தேடி வந்தனர்.

அதேவேளையில், குட்டி யானை மிகவும் சோர்ந்து காணப்பட்டதால் அதற்கு தண்ணீர் மற்றும் பால் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, குட்டியானை எழுந்து நின்றது. இந்த நிலையில், நீண்ட நேரத்திற்கு பின் குட்டி யானையின் பிளிறல் சத்தம் கேட்டு வனப்பகுதியில் இருந்து வந்த தாய் யானை மற்றும் சக யானைகள் குட்டியை மீண்டும் வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்றன. மேலும், வனத்துறையினர் தாயுடன் சேர்ந்த அந்த குட்டியானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.