×

சேலத்தில் அமைச்சர் கார் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

 

சேலத்தில் நிலத் தகராறு தொடர்பாக அமைச்சர் கார் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சேலம் ஆட்டையாம்பட்டி வேலைநத்தம் பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் தினேஷ் குப்தா. இவர் அந்த பகுதியில் பல ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி ஆட்டையாம்பட்டி மணியம்கரடை சேர்ந்த மாரியப்பன், சந்திரன் ஆகியோர் அடியாட்களுடன் , தினேஷ் குப்தாவின் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது, மளிகைக் கடை அமைந்துள்ள இடத்திற்கு ரூ.1 லட்சம் முன் பணமும், மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் வாடகையும் வழங்க வேண்டும் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தினேஷ் குப்தா, ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தினேஷ் குப்தா, தனது மனைவி லட்சுமி மற்றும் 5 வயது மகளுடன், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மனு அளிக்க வந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது, அமைச்சர் கார் நின்ற இடத்தில் தினேஷ்குப்தா, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து தினேஷ்குப்தா மற்றும் அவரது மனைவியை மீட்டனர். தொடர்ந்து, அவர்களை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அமைச்சர் கார் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.