×

மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி... திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்!

 

கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்!

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.இதனை ஒட்டி, நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.   தொடர்ந்து, முன் மண்டபத்தில்  சுப்பிரமணிய சுவாமி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும், தங்கமயில் வாகனத்தில் மருதமலை சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 3 மணி அளவில் சூரனை வதம் செய்ய அன்னையிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் முருக பெருமான் முதலாவதாக தாராகசூரனையும், 2-வதாக பானுகோபமையும் வதம் செய்தார். மூன்றாவதாக சிங்கமுக சூரனையும், நான்காவதாக சூரபத்மனையும் வதம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்த ஏரளாமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, இன்று காலை சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவத்துடன் கந்த சஷ்டி திருவிழா நிறைவடைகிறது.