×

உதகை தாவரவியல் பூங்காவில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

 

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 அரசு பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், கல்லாறு, பர்லியாறு, நஞ்சநாடு உள்ளிட்ட 9 அரசுப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 1,200-க்கும் மேற்பட்ட ஆண், பெண்  தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தினக் கூலியாக ரூ.425 மட்டுமே பெறுகின்றனர்.

இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும், கால முறை ஊதியம், ஊக்கத்தொகை உயர்வு, கல்வி தகுதிக்கேற்ப காலியாக உள்ள இடங்களை தற்காலிக பணியாளர்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று காலை முதல் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில்  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட 5 பூங்காக்கள் மற்றும் 9 அரசு பண்ணைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஊழியர்கள் போராட்டம் காரணமாக உதகையில் உள்ள பூங்காக்களில் பராமரிப்பு பணிகள் முடங்கின.