×

துணிநூல் பட்டறையில் கொத்தடிமையாக வைத்து பாலியல் தொல்லை... பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆட்சியரிடம் புகார்!

 

ஈரோட்டில் துணிநூல் பட்டறையில் கொத்தடிமையாக வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் ஒருவர், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தார். 

தஞ்சாவூர் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது 18 வயது மகள் குடும்ப வறுமை காரணமாக, ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கத்தொழுவு பகுதியில் உள்ள ஜோஸ்னா துணிநூல் பட்டறையில் கடந்த 3 வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், துணிநூல் பட்டறையின் உரிமையாளர் செந்தில்குமார், அவரது மனைவி கோகிலா மற்றும் அவரது தந்தை அண்ணாதுரை ஆகியோர் குறைந்தபட்ச சம்பளத்தில் வேலை வாங்கிக் கொண்டு, இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை வெளியில் கூறினால் கொலைசெய்து விடுவதாக மிரட்டி, அவரது தொடையில் சூடுவைத்தும் சித்ரவதை செய்துள்ளனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட இளம்பெண் அங்கிருந்து தப்பித்து, சமூக ஆர்வலர்கள் உதவியோடு, தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், பாதிக்கப்பட்ட இளம்பெண், இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணியை சந்தித்து, சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்துள்ளார். புகார் குறித்து  ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு)  ரெங்கநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தின் கீழ்  கைதுசெய்யக்கோரி, ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகனிடம்,பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு  அளிக்கப்பட்டது.