×

பழனி அருகே அமராவதி ஆற்றில் கழிவுநீரை கலந்த விவகாரம் - தனியார் ஆலைக்கு சீல்வைப்பு!

 

பழனி அருகே சாமிநாதபுரத்தில் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவுநீரை அமராவதி ஆற்றில் கலந்த புகாரில், தனியார் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக சீல்வைத்தனர்.

பழனி அருகே திண்டுக்கல் - திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் வெங்கடேஸ்வரா பிராசசர்ஸ் என்ற பெயரில் பிரபலமான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நூல்களுக்கு நிறம் ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெங்கடேஸ்வரா பிராசசர்ஸ் ஆலையை ஒட்டி செல்லும் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு நீரை கலப்பதாகவும், இதனால் அந்த பகுதி பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. அதன் பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுநீர் மற்றும் ஆலைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் அமராவதி ஆற்றில் வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்குப் முன்பு ஆலை நிர்வாகத்திற்கு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி எச்சரிக்கை விடுத்துடன், ஆலைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இந்த நிலையில், தற்போது மாசுக்கட்டுப்பாடு வாரியம் உத்தரவின் பேரில் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. அமராவதி ஆற்றில் கழிவுநீரை கலந்ததாக எழுந்த புகாரில் பிரபல ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.