×

தஞ்சையில் தனியார் குடோனில் பதுக்கிவைத்திருந்த 750 கிலோ குட்கா பறிமுதல் ; குடோன் உரிமையாளர் கைது!

 

தஞ்சாவூரில் குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 750 கிலோ குட்கா, 110 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்

கர்நாடகா மாநிலத்தில் இருந்து தஞ்சைக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திவந்து, பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி., ரவளி பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தஞ்சை டவுன் டிஎஸ்பி ராஜா, காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி ஆய்வாளர் ரஜேஸ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், கரந்தை  கொடைகார தெருவில்  உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான குடோனில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, குடோனில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், கர்நாடக மாநில மதுபாட்டில்களும் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, குடோனில் இருந்த 750 கிலோ குட்கா பொருட்கள், 110 வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இன்டிகா காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குடோன் உரிமையாளர் பிரபுவை கைது செய்த தனிப்படை போலீசார், பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தஞ்சை நகரில் ஏராளமான குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.