×

ஈரோட்டில் மருத்துவக் கழிவுகளை சாலையில் கொட்டியவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு!

 

ஈரோட்டில் சாலையேராம் காலாவதியான மருந்து, மாத்திரைகளை கொட்டிய நபருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மாநகராட்சி சுகாதார அலுவலர் உத்தரவிட்டார்.

ஈரோடு எஸ்கேசி சாலை, இசிஎம் லேஅவுட் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நேற்று காலை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரமாக 2 மூட்டைகளில் ஏராளமான காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடந்தன. ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் மர்மநபர்கள் காலாவதியான மருந்து மாத்திரைகளை கொட்டிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் 34-வது வார்டு கவுன்சிலர் ரேவதி திருநாவுக்கரசு ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுசெய்தபோது சாலையோரம் கிடந்தவற்றில் ரத்த கொதிப்பு மாத்திரைகள், மருந்துகள், கருத்தடை மாத்திரைகள் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. அந்த பகுதியில் ஏராளமான மொத்த மருந்து விற்பனை நிலையங்கள் உள்ளதால், அவற்றில் இருந்து மருந்துகள் கொட்டப்பட்டதா என மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, ஈரோடு கைக்கோளன் தோட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் காலாவதியான மருந்து மாத்திரைகளை சாலையோரம் கொட்டியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பிரபாகரனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, மாநகராட்சி 3-வது மண்டல சுகாதார அலுவலர் இஸ்மாயில் உத்தரவிட்டார். மேலும், இதுபோன்று சாலையோரம் மருத்துவக்கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.