×

கோவையில் அதிமுக முன்னாள் கவுன்சிலரிடம் உரிய ஆவணமில்லாத ரூ.3 லட்சம் பறிமுதல்!

 

கோவை தொண்டாமுத்தூரில் அதிமுக முன்னாள் கவுன்சிலரிடம் இருந்து உரிய ஆவணமில்லாத ரூ.3 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, கோவையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, கோவை தொண்டாமுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கல்பனா தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தொண்டாமுத்தூரில் இருந்து தென்கரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக முன்னாள் கவுன்சிலர் உலகநாதன் என்பவரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது வாகனத்தில் ரூ.3 லட்சம் பணம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

இதனை அடுத்து, பணத்தை பறிமுதல் அதிகாரிகள், அதனை தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விவசாய பணிகளுக்காக பணத்தை கொண்டு சென்றதாக உலகநாதன் அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அவரிடம் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை விடுவிக்க முடியாது என கூறிய அதிகாரிகள், ஆவணங்களை வழங்கிவிட்டு பண்த்தை பெற்றுச் செல்லும்படி கூறினர்.