×

பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம்; பெண் வீஏஓ, கிராம உதவியாளர் கைது!

 

செங்கல்பட்டு மாவட்டம் திருவாஞ்சேரியில் பட்டா மாறுதலுக்கு ரூ.13 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்துள்ள திருவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பியூலா. இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்வதற்காக திருவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் தீபாவிடம் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய ரூ. 15 ஆயிரம் லஞ்சம் தர  அவர் கேட்டுள்ளார். பியூலா, கேட்டுக்கொண்டதன் பேரில் இறுதியாக ரூ.13 ஆயிரம் வழங்கும் படி கூறியுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாத பியூலா, இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், பியூலாவிடம் ரசாயனம் தடவிய ரூ.13 ஆயிரம் பணத்தை வழங்கி, அதனை விஏஓ தீபாவிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன் படி, நேற்று பியூலா, திருவாஞ்சேரி கிராம நிரவாக அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது விஏஓ அறிவுறுத்தலின் பேரில், கிராம உதவியாளரான தனலெட்சுமி அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விஏஓ தீபா, கிராம உதவியாளர் தனலட்சுமி ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.