×

ஜேசிபியை வாடகைக்கு எடுத்து உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டல் - 4 பேர் கைது!

 

திண்டுக்கல் அருகே ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்து உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 ஜேசிபி வாகனங்கள், கார், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கார்த்திகேயன் ஜேசிபி வாடகைக்கு வேண்டும் என்ற விளம்பரத்தை பார்த்து, அந்த செல்போன் எண்ணிற்கு  தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அதில் பேசியவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வாகனத்தை கொண்டு வருமாறு கூறியதன் பேரில், கடந்த ஜுலை 1ஆம் தேதி கார்த்திகேயன், தனது ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த நபர் தன்னை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் தனியாக கட்டுமான நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த வாகனத்திற்கு மாத வாடகையாக ரூ.70 ஆயிரம் வங்கியில் செலுத்துவதாக கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய கார்த்திகேயன்,  தனது ஜேசிபி வாகனத்தை அவரிடம் விட்டு சென்றுள்ளார். ஆனால் கூறியபடி அவர்கள் வாடகை பணம் தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திகேயன் செல்போனில் தொடர்பு கொண்டபோது, ஜேசிபி வாகனத்தை திரும்பத் தர வேண்டும் என்றால், ரூ.2.28 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய திண்டுக்கல் எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன் பேரில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (23), திருப்பூரை சேர்ந்த நூருல் அமீன் (29), முகமது சபா (29), தூத்துக்குடியைச் சேர்ந்த பேச்சுத்துரை (26) ஆகியோர் ஜேசிபியை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து,  4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும்,  கார்த்திகேயனின் ஜேசிபி வாகனம் உள்பட 2 ஜேசிபி வாகனங்கள், லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.