×

சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

 

உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திறக்காக நேற்று ஆட்சியர் முரளிதரன் தண்ணீரை திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி அணை அமைந்துள்ளது. 52.55 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக ஹைவேவிஸ் - மேகமலை, பெருமாள் மலை, சுருளிமலை பகுதிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக சண்முகா நதி அணை தனது முழு கொள்ளளவான 52.55 அடியை எட்டியது. அணைக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் உபரி நீர் வெளியேறி வந்தது.

இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி உள்ளிட்ட கிராம விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.அதனை ஏற்று நேற்று சண்முகாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்தார். இதனை அடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கனஅடி நீர் பாசனக் கால்வாயில் திறக்கப்பட்டு வருகிறது.

நீர் திறப்பின் மூலம் ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி, சின்ன ஓவுலாபுரம், அப்பிபட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள் புரம், ஓடைப்பட்டி வரையில் 1,640 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும். சண்முகாநதி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி சுற்று வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.