×

நெல்லை அருகே போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு!

 

நெல்லையில் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலத்தை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் 6 செண்ட் நிலத்தை வாங்கி உள்ளார்.  இதனை தொடர்ந்து, அவர் தனது நிலத்தை அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜீலை மாதம் ராஜேந்திரன் நிலத்தை பார்வையிட சென்றபோது, அங்கு மண், கற்கள் நிரப்பி கொட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது நிலத்தை வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்துள்ளார். அப்போது, அந்த நிலம் கடந்த 2011 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் போலி ஆவணம் மூலம் வேறோரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ராஜேந்திரன் தனது நிலத்தை மீட்டுத்தரும்படி, நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனிடம் மனு அளித்தார். மாவட்ட எஸ்பி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஜெயபால் பர்னபாஸ்-க்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீராள் பானு, உதவி ஆய்வாளர் சோபியா மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலத்தை மீட்டனர். இதனை தொடர்ந்து, நேற்று அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சரவணன், நில உரிமையாளர் ராஜேந்திரனிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். அப்போது பேசிய எஸ்பி சரவணன், நிலத்தை வாங்கும் நில  உரிமையாளர்கள் தங்களது நிலத்தை தொடர்ந்து நேரில் சென்று பார்வையிடுவது மட்டுமல்லாமல்,  நிலத்தை அவ்வப்போது வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.