×

சம்பளத்தை நிறுத்தி வைத்ததால் ஆத்திரம்... வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியர்!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலுர் வட்டார கல்வி அலுவலரை, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆபாசமாக பேசி, தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை அடுத்த திருநாவலுர் ஊராட்சிக்கு உடப்ட்ட மேப்புலியூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், சேகர் பள்ளிக்கு அடிக்கடி வராமல் வீட்டில் இருப்பதாக புகார்கள் வந்தது. அதன் பேரில், திருநாவலுர் வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன், சில நாட்களுக்கு முன் மேப்புலியூர் அரசுப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தலைமை ஆசிரியர் சேகர் பள்ளியில் இல்லாதது தெரிய வந்தது. இதனை அடுத்து, சேகருக்கு 18 நாள் சம்பளத்தை நிறுத்திவைத்து வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணா உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் சேகர், நேற்று திருநாவலுர் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வட்டார கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தனது சம்பளத்தை நிறுத்தி வைத்ததை கண்டித்து அவரை ஆபாசமாக பேசியும், மேஜையில் இருந்த பணிப் பதிவேடை அவர் மீது வீசியும் தாக்கினார்.

மேலும், வட்டார கல்வி அலுவலருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, தலைமை ஆசிரியர் சேகர், வட்டார கல்வி அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.