×

குடியாத்தத்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து பறிமுதல்!

 

ஆற்காடு அருகே உயிருக்கு ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளை படிக்கட்டிலும், பின்புற ஏணியிலும் ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தை பறிமுதல் செய்து, குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டடம் ஆற்காட்டுக்கு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆற்காடு அருகே இந்த பேருந்து சென்றபோது, ஏராளமான மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருந்தின் படிகளிலும், பின்புற ஏணியில் உயிரை பணயம் வைத்தபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

சம்பந்தபட்ட தனியார் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.  இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை, நேற்று குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் குடியாத்தம் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர், பேருந்து ஒட்டுநர்  வெங்கடேசன், நடத்துனர் ஜெயபிரகாஷ் ஆகியோரிடம்  விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, குறிப்பிட்ட தனியார் பேருந்தை பறிமுதல் செய்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஸ் கண்ணன், பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக சாலையில் சென்ற பேருந்து மீது நடவடிக்கை எடுக்கும்படி, வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பேருந்து குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.