×

நரிக்குறவர் சமூக மக்களுக்கு நிலம் வழங்கக்கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு!

 

பெரம்பலூரில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம் மற்றும் பட்டா வழங்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேப்பந்தட்டை அருகே உள்ள 36 எறையூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமூக மக்கள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டம் 36 எறையூர் கிராமம் நரிக்குறவர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுக மக்கள்  வசித்து வருகிறோம்.

நாங்கள் கடந்த சுமார் 46 ஆண்டுகள்களுக்கு மேலாக உழுது, பயிர் செய்து வந்த 353 ஏக்கர் நிலத்தில், தற்போது மாவட்ட நிர்வாகம் சிப்காட் வருவதாக கூறி உள்ளீர்கள்.  திமுக எம்.பி. ஆ.ராசா 150 ஏக்கர் நிலத்தை, 150 பேருக்கு வழங்குவதாக கூறினார். அதையும் தற்போது 80 ஏக்கர் தான் உள்ளதால் தர முடியாது என்று குறிப்பிடுகிறீர்கள். அதனால் சிப்காட்டுக்கு எந்த நிலத்தையும் தரக்கூடாது. அதனை ரத்து செய்ய வேண்டும். மேலும், எங்களது கோரிக்கையை ஏற்று 120 நரிக்குறவர் குடும்பத்திற்கு தலா 2 ஏக்கர் நிலமும், பட்டாவும் தருமாறு  கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளனர்.