×

"புதைபடிவ பூங்காவை பார்வையிட இணையதளம் மூலம் அனுமதி பெற வேண்டும்" - அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு!

 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதைப்படிவ பூங்காவை பார்வையிட வருபவர்கள் இணைய தளம் மூலம் முன் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் கிடைக்கப்பெறும் தொல்லியல் படிமங்கள் மற்றும் புதைப்படிவ பொருட்களை பொதுமக்கள் அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில் புதைபடிவ பூங்கா அமைக்கவும், அந்த பூங்காவில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், படிவங்கள் அதிகம் காணப்படும் இடங்களில் அதுகுறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்விடங்களை அவ்வப்போது பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பார்வையிட்டு தேவைக்கேற்ப மாதிரிகளை சேகரித்து எடுத்துச்சென்றதால், சில அரிய தொல்லியல் படிமங்களின் மாதிரி பிற்காலத்தில் வரும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை.எனவே அரியலூர் மாவட்ட நிர்வாகம் இதனை முறைப்படுத்தி, இணையதள வாயிலாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டுமென முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

இதற்கான இணையதளம் https://service online.gov.in/tamilnadu/direct Apply.do?serviceId=753 மற்றும் இதுகுறித்த மேலும் விவரங்களை பெற தமிழ்நாடு அரசு சிமெண்ட் கழக (அரியலூர்) புவியியலாளர் எஸ். ஸ்ரீபிரசாத் (செல்போன் எண் -919566947917, E-Mail ID:geoariper@gmail.com) அவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், அரியலூர் மாவட்ட வாரணவாசி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டு பொதுமக்கள் பயனடைய வேண்டுமெனவும், தொல்லியல் புதைப்படிவங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் வேண்டும் என, ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்