×

சேலத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

 

சேலத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறி பள்ளி மாணவர்களுடன், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டி காமராஜ் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்றும், குடிநீருடன் கழிவுநீரும் கலந்து கலங்கலாக வருவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  

இந்த நிலையில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி, காமராஜ் காலனியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலங்கலான தண்ணீர் பாட்டிலுடன் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காமராஜ் காலனி பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் பல மாதங்கலாக கலங்கலாக வருவதாகவும், கழிவுநீரிருடன் கலந்து வருவதால் பல்வேறு நோய் தொற்று அபாயங்கள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.

மேலும், துர்நாற்றம் வீசுவதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு முறையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனை அடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து, ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..