×

ஈரோட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி ஈரோட்டில்  அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தாலுகா அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர்கள் ஹரிதாஸ், ஆறுமுகம், பிரசன்னா, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 2022 ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்கிடவும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ.497 ஆக உயர்த்தியதை கைவிடவும் வலியுறுத்தினர். மேலும், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்கிடவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திடவும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதேபோல், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 அனைவருக்கும் வழங்கிடவும், மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பயண கட்டண சலுகையை வழங்கிடவும், பணி நிறைவு நாளன்று சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.