×

கோவையில் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம்: 20 கிலோ இறைச்சி பறிமுதல்!

 

திருவள்ளுவர் தினமான இன்று கோவையில் தமிழக அரசின் உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்த 3 கடைகளுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், அந்த கடைகளில் இருந்து 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி கோவையில் இறைச்சி கடைகள் இயங்கக்கூடாது என கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கோவை மாநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இறைச்சி கடைகள் செயல்படவில்லை. இந்த நிலையில், மாநகருக்கு உட்பட்ட வடவள்ளி, கவுண்டம்பாளையம், பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் இறைச்சிக்கடைகள் செயல்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது தடையை மீறி 3 கடைகளில்  இறைச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, 3 கடைகளில் இருந்தும் 20 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.