×

பள்ளிக்கு செல்லாததால் பெற்றோர் கண்டிப்பு... விரக்தியில் உயிரை மாய்த்த பிளஸ் 2 மாணவி!

 

திருச்சி அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.பாதர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள். கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது 17 வயது மகள் வர்ஷினி. இவர் டி. முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை அருள் மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகியோர் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது, வர்ஷினி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மாலை இருவரும் வீட்டிற்கு வந்தபோது வர்ஷினி பள்ளிக்கு செல்லாததை அறிந்து, அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் வர்ஷினிக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் மனமுடைந்த வர்ஷினி வீட்டில் இருந்து வெளியேறி, அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற வர்ஷினி இரவாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடிச் சென்றனர். அப்போது, அவர் கிணற்றில் சடலமாக மிதந்தை கண்டு கதறி அழுதனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உப்பிலியபுரம் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை அருள் அளித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.